மோசடி விளம்பரம்:
சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்படும் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்துக்குத் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தல் 36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தை நம்பி சிலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விளம்பரம் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்குப் புகார் சென்றுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்த நிறுவனங்களிலும், இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னையில், அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர் போன்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.
சிக்கிய ஆவணங்கள்:
செங்கல்பட்டு கிளையில் நடைபெற்ற சோதனையில் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூரில் நடைபெற்ற சோதனையில் 1.20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை நிறுவனத்தில் பணியாற்றிவரும் பட்டாபிராமன் வீடு கடலூரில் உள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் 14 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள நிறுவனத்தின் உறவினர் வீட்டில் நடத்திய சோதனையில் 312 கிராம் தங்கம், 650 கிராம் வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி கிளை தொடங்கிய 18 நாளில் மட்டும் 107 வாடிக்கையாளர்கள் சுமார் 1.10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிக வட்டி தருவதாக மோசடி நடைபெற்றிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
3.41 கோடி ரூபாய் பறிமுதல்:
தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 48 கணினி, மென்பொருள், ஆறு மடிக்கணினி, 44 செல்போன்கள், 60 சவரன் தங்கம், இரண்டு கார் மற்றும் 3.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வசூல் செய்து பணம் டெபாசிட் செய்துள்ள இந்த நிறுவனத்தின் 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு வெளியே காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டுச்சதி உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கேல்ராஜ், செந்தில்குமார் ஆகிய எட்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மறுக்கும் நிறுவனம்:
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, “முதலீடு செய்தல் அதிக வட்டி தருவதாக எங்கள் நிறுவனம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரோ மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்யவே காவல்துறையினர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த யாரையும் ஏமாற்றவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் இந்த வழக்கு விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்றும், முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் @[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, ரிசர்வ் வாங்கி வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.