மும்பை: “அரசியல் தெரியாவிட்டால் சமையல் செய்யப் போங்கள்” என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலேவை விமர்சித்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சிக் கூட்டத்தில் பேசிய சுப்ரியா சூலே, “மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒருமுறை டெல்லிக்குச் சென்றார். அங்கு யாரையோ சந்தித்தார். அடுத்த இரண்டு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இட ஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதி தந்தது. சிவ்ராஜ்சிங் சவுகானை நான் ஒருமுறை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவரிடம் இது குறித்து விசாரித்தேன். அவர் அப்போது எதுவும் சொல்லவில்லை” என்று பேசியிருந்தார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டீல், “நீங்கள் எல்லாம் ஏன் அரசியலில் இருக்கிறீர்கள்? பேசாமல் வீட்டுக்குச் சென்று சமையல் செய்யுங்கள். டெல்லிக்கு போங்கள்… இல்லை இடுகாட்டுக்கும் போங்கள்… ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டை வாங்கி வாருங்கள். ஒரு மக்களவை உறுப்பினராக இருந்து கொண்டு உங்களுக்கு எப்படி முதல்வரிடம் முன் அனுமதி பெற்றுதான் பேச வேண்டும் என்று கூட தெரியாமல் போனது?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், தன் பேச்சை சமாளிக்கும் விதமாக “நான் சுப்ரியா கிராமங்களுக்கு சென்று மக்களை அறிந்தால் அரசியல் தெரியும் என்றே கூறினேன்” என்று விளக்கியுள்ளார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. “பாட்டீல் சப்பாத்தி செய்ய கற்றுக் கொண்டால் வீட்டில் மனைவிக்கு உதவலாமே!” என்று கூறியுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவா, பட்டீலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சிவ சேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, “பாஜக எம்.எல்.ஏ. பாலினப் பாகுபாட்டுடன், விரும்பத்தகாத, வெட்கக்கேடான சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுப் பெண்களிடம் சந்திரகாந்த் பட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்களை அவமதிக்கத் தவறுவதில்லை” என்று விமர்சித்துள்ளார்.