கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வழக்கறிஞர் ஒருவர் தனது அவலகத்திற்கு வந்த நபரை கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் நெல்சன். வழக்கறிஞரான இவரது அலுவலகத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 21-ம் தேதி சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் பிரகாசபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் உத்தம்சிங் என்பவர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தோணிராஜ் உத்தம் சிங் வருகைக்காக காத்திருந்த நெல்சன், அந்தோணிராஜ் வந்தவுடன் ”ஏன் இவ்வளவு காலதாமதமாக வந்தீர்கள்.
ஒருவரிடம் ஒரு மேட்டர் பேச போகும்போது சரியான நேரத்திற்குப் போக வேண்டும். இதுபோல் கால தாமதமாக வக்கீல் வந்தாலும் கவர்னரோ வந்தாலும் வெளியே செல்லுங்கள் என்பேன்” என்றுக்கூறி திட்டியுள்ளார். இதனால், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், நெல்சன் தனது அலுவலகத்தில் இருந்த கத்தியை எடுத்து அந்தோணிராஜ் உத்தம்சிங் மற்றும் அவருடன் வந்த வழக்கறிஞரையும் வெளியே போ என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் புகார் மனுவை பதிவு செய்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் நெல்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று வழக்கறிஞர் நெல்சன் மீது அந்தோணி ராஜ் உத்தம்சிங் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் 294(b), 506(||) எ இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM