திருவனந்தபுரம்: மலையாளத்தில் ‘நீலத்தாமரை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பிறகு சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இரவில் தன்னுடைய தோழிகளுடன் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஆட்டோவை மறித்த மட்டஞ்சேரி இன்ஸ்பெக்டர் பிஜு, அர்ச்சனா கவியிடம் மோசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக அர்ச்சனா கவி தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில், இன்ஸ்பெக்டர் பிஜு தங்களிடம் விபச்சாரத்திற்கு செல்கிறீர்களா என்று கேட்டு அவமானப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீசில் புகார் செய்யவில்லை. இதுகுறித்து அறிந்த கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு, சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மட்டஞ்சேரி உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அர்ச்சனா கவி மற்றும் அவரது தோழிகளிடம் இன்ஸ்பெக்டர் பிஜு அவமரியாதையாக நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிஜு மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.