அரசியல் பிரவேசம், பாலிவுட்டில் படமான பயோபிக் என எப்போதும் ஊடகங்களின் பார்வையிலும் மக்களின் மனங்களிலும் இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்.
சில தினங்களுக்கு முன்னால், ”எங்கள் காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கிரிக்கெட் மட்டைகளை ஒளித்து வைத்தனர். அவர்களுக்கு தங்கள் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக வேண்டும், பொறியாளர்கள் ஆகவேண்டும் என்கிற கனவுகள்தான் இருந்தன. இந்தக்கால பெற்றோர்களோ தங்கள் குழந்தைகளை விளையாட்டுத் திடலுக்கு அழைத்து வருகிறார்கள். மிக நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்ந்தால் உலக அளவில் இந்தியாவுக்குப் பல பதக்கங்கள் கிடைக்கும்”என்று நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாகப் பேசியிருந்தார் கபில்தேவ்.
இன்றைய மாணவர்கள் எந்த அளவிற்கு விளையாட்டுகளில் ஈடுபாடாக இருக்கிறார்கள்; பெற்றோர்களின் மனநிலை என்ன; என்ன செய்தால் கபில்தேவ் சொன்னதுபோல இந்தியாவுக்குப் பல பதக்கங்கள் கிடைக்கும் என்பது பற்றி தேசிய அளவிலான முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் தற்போதைய கால்பந்தாட்டப் பயிற்சியாளருமான ராமன் விஜயனிடம் பேசினோம்.
“கபில் சார் சொன்னது உண்மைதான். கடந்த 10 – 12 வருடங்களாகப் பெற்றோர்களின் மனப்பான்மை மாறிக்கொண்டு வருவதை என்னுடைய அனுபவத்தில் நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன். சில தினங்களுக்கு முன்னால்கூட திருவள்ளூரில் கால் பந்தாட்டம், கபடி, ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி பெறுவதற்கான சம்மர் கேம்ப்பை நடத்தினேன். 600 மாணவர்கள் பயிற்சிபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் 85 பேர் பெண் குழந்தைகள்… அவர்களுடைய அம்மாக்கள்தான் அழைத்து வந்திருந்தார்கள்
மகள்கள் ட்ராக்கில் ஓடும்போது, ‘பயப்படாத ஓடு; விடாதே… ஓடு’ என்று அவர்கள்தான் உற்சாகப்படுத்தினார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் இப்படியெல்லாம் பெற்றோர்கள் வந்து பின்னால் நின்றதே இல்லை. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கல்வி மட்டுமே உலகம்; அதுதான் பின்னாளில் காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். சமுதாயத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கபில் சார் சொன்னதற்கு இந்தச் சம்பவம் சின்ன உதாரணம்” என்றவர் தொடர்ந்தார்.
”கொரோனாவுக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதிலிருந்து பிள்ளைகளை மீட்க வேண்டும் என்றால் விளையாட்டு மட்டுமே ஒரே வழி. விளையாட்டு, மாணவர்களுக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தரும். வெற்றியையும் தோல்வியையும் எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்லிக் கொடுக்கும்.
தோல்வியிலிருந்து எழுந்து எப்படி வெற்றிபெறுவது என்கிற வைராக்கியத்தைச் சொல்லிக் கொடுக்கும். எந்த இடத்தில் எப்படி சர்வைவ் செய்ய வேண்டும்; எதிராளியை என்ன செய்தால் சமாளிக்க முடியும் என்கிற வாழ்க்கைப் பாடங்களையும், விநாடி நேரத்தில் ஜெயிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற யுக்தியையும் விளையாட்டு சொல்லிக் கொடுத்துவிடும்.
பொதுத்தேர்வில் விளையாட்டுக்கென தனியான மதிப்பெண்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்
விளையாட்டின் முக்கியத்துவம் இன்றைய பெற்றோர்களுக்குத் தெரிந்திருப்பது நல்ல விஷயம்தான். அதே நேரம், கல்வியைப் போலவே இதிலும் பெற்றோர்களுக்கு அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இது பிள்ளைகளுக்கு அவ்வளவு நல்ல விஷயம் கிடையாது. ஏனென்றால், விளையாட்டில் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. விளையாட்டு மைதானத்துக்குச் செல்கிற அனைவருமே தங்கப்பதக்கம் வாங்குகிற அளவுக்கு சக்ஸஸ்ஃபுல் விளையாட்டு வீரர்களாகி விட முடியாது.
தவிர, எதிர்காலத்தில் இந்தியா நிறைய பதக்கங்கள் வாங்க வேண்டுமென்றால், பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கமும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுத்தேர்வில் விளையாட்டுக்கென தனியான மதிப்பெண்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குப் பிடித்த ஏதோவொரு விளையாட்டில் மிளிர்வார்கள். அவர்களில் இதுதான் என் வாழ்க்கை என்று நினைப்பவர்கள் நாட்டுக்கு நிச்சயம் தங்கப்பதக்கம் பெற்றுத் தருவார்கள்” என்கிறார் ராமன் விஜயன்.