மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்திற்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். வழி முழுவதும் அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் மாற்று ஏற்பாடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாலை 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரூ. 5.45 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ஐஎன்எஸ் அடையாறு, நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதியில் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.