சென்னை: தமிழக இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக அரசு நிச்சயமாக செயல்படும் என்று இளைஞர் திறன் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் பயிற்சி அளிக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து 388 ஒன்றியங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25.66 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார். இளைஞர் திறன் திருவிழா கலந்தாய்வு கூடங்களை பார்வையிட்டு, அங்கு வந்திருந்த இளைஞர்களுடன் உரையாடினார். தொடர்ந்து, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களையும், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அத்துடன் 608 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சிறு தொழில்களை நடத்த ரூ.25.66 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்புகளையும் வழங் கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:
நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரியும் இதுதான்.
இந்த கல்லூரியை இடிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முனைந்தார். ஆனால், இடிக்கக் கூடாது என மாணவியர், பழைய மாணவியர், ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். பூட்டியிருந்த கேட் மீது ஏறி உள்ளே சென்று மாணவிகளை தூண்டிவிட்டதாக அன்று இரவே என்னை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். அதில் எனக்கு பெருமைதான்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாதான். அந்த இளைஞர்களை அனைத்து வகையிலும் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டும். அதற்கு முக்கியமாக அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் தந்தாக வேண்டும். கற்று முடித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்க வேண்டும். அவர்கள் அதற்கேற்ற ஊதியத்தையும் பெற வேண்டும். அதன்மூலம் அவர்கள் தங்கள் முழு திறனையும் கொடுத்து உழைப்பார்கள். அத்தகைய உழைப்புச் சக்கரத்தை சரியாக உருவாக்கும் அரசுதான் தற்போதைய திமுக அரசு.
10 லட்சம் இளைஞர்கள்
கடந்த 2010-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை அறிவித்தேன். ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் 5 லட்சம் இளைஞர்களின் கல்வி, அறிவு, மற்றும் திறன்களை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை மேம்படுத்தவும் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும் திறன்களை உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது. நம் மாநில இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரசு நிச்சயமாக செயல்படும்.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கடந்த நிதி ஆண்டில் புதிதாக 36,957 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021-2022 நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.50 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை முனைப்போடு அரசு எடுத்து வருகிறது.
இளைஞர்கள் அனைவரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல புதிய திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி. தமிழகத்தை திறன் மேம்பாட்டின் முதன்மை மாநிலமாக ஆக்க இந்த அரசு உறுதி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அனைத்து சேவைகளும் வழங்கும் ‘திராவிட மாடல்’ அரசாக நமது அரசு உங்களுக்கு என்றைக்கும் துணைநிற்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சி.வி.கணேசன், அரசு செயலர்கள் அமுதா, கிர்லோஷ்குமார், சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.