எங்கள் அணி தோல்விக்கு காரணம் இதுதான்..?! – கே.எல்.ராகுல் விளக்கம்

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் (எலிமினேட்டர்) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. மழையால் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே பிளிஸ்சிஸ் (0) கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து ரஜத் படிதார், கோலியுடன் கைகோர்த்தார். அதிரடியில் வெளுத்து வாங்கிய படிதார், சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். அவர் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் கோலி தனது பங்குக்கு 25 ரன்கள் (24 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் அவேஷ்கானின் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 9 ரன்னிலும், மஹிபால் லோம்ரோர் 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இன்னொரு பக்கம் ரன்மழை பொழிந்து வியப்பூட்டிய படிதார், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். தொடர்ந்து மொசின்கானின் பந்துவீச்சில் சிக்சரோடு தனது ‘கன்னி’ சதத்தை 49 பந்துகளில் நிறைவு செய்தார். முன்னதாக படிதார் 72 மற்றும் 93 ரன்களில் வழங்கிய எளிதான கேட்ச் வாய்ப்புகளை லக்னோ பீல்டர்கள் கோட்டை விட்டனர்.

படிதாருடன் சேர்ந்து கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியில் மிரட்ட ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. படிதார் 112 ரன்களுடனும் (54 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 37 ரன்களுடனும் (23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 84 ரன்கள் திரட்டினர்.

பின்னர் 208 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த லக்னோ அணியில் குயின்டான் டி காக் (6 ரன்), அடுத்து வந்த மனன் வோரா (19 ரன்) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று போராடினார். அவருக்கு தீபக் ஹூடா (45 ரன்) ஒத்துழைப்பு தந்தார். ஆனால் ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் லக்னோவுக்கு நெருக்கடி எகிறியது. 19-வது ஓவரில் ராகுல் (79 ரன், 58 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்ததும் அவர்களின் நம்பிக்கை தகர்ந்தது.

20 ஓவர்களில் லக்னோ அணியால் 6 விக்கெட்டுக்கு 193 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் எக்ஸ்டிரா வகையில் பெங்களூரு பவுலர்கள் 15 வைடு உள்பட 22 ரன்களை வாரி வழங்கினர். வெற்றியை ருசித்த பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்சுடன் நாளை இரவு ( வெள்ளிக்கிழமை) ஆமதாபாத்தில் மோதுகிறது.

தோல்வி அடைந்த லக்னோ அணி போட்டியை விட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து தங்கள் அணி தோல்விக்கு காரணம் குறித்து அந்த கே.எல்.ராகுல் பதில் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எங்கள் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு மோசமான பீல்டிங் தான் காரணம். முக்கியமான கேட்சுக்களை தவற விட்டதும் வெற்றி பெறாததற்கான காரணம். நாங்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் இது மிகவும் வெளிப்படையானது. எளிதான கேட்ச்களை விட்டது ஒருபோதும் உதவாது.

முதல் மூன்று இடங்களில் உள்ள ஒருவர் சதம் அடித்தால், அந்த அணி பெரும்பாலும் வெற்றி பெறும். நாங்கள் நிறைய நேர்மறை எண்ணங்களை திரும்பப் பெறுவோம். நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம், ஒவ்வொரு அணியும் அதைச் செய்கிறது. இது ஒரு இளம் அணி. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்” என்று அவா் கூறினாா்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.