சேலம்: ஏற்காட்டில் கோடைவிழா மலர்க் கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். வரும் 1-ம் தேதி வரை 8 நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழகத்தின் முக்கிய கோடை சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ஏற்காட்டில், ஆண்டுதோறும் கோடைவிழா மலர்க் கண்காட்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.
இந்நிலையில், தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், ஏற்காடு அண்ணா பூங்காவில், 45-வது கோடை விழா மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் கோடை விழாவை தொடங்கி வைத்துப் பேசினர்.
விழாவில், அமைச்சர் மா.மதிவேந்தன் பேசும்போது, “தமிழக முதல்வர், சுற்றுலாத் தளங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 10 முதல் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள், பொழுது போக்குவசதிகள் செய்து தரப்படும். ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அறிமுகம் செய்யப்படும். மேலும், ஏற்காட்டில் 5 முதல்10 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு சாகச சுற்றுலா அறிமுகம் செய்யப்படவுள்ளது” என்றார்.
விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 1,157 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நெகிழிப்பைகளைத் தவிர்க்கும் வகையில், ஏற்காட்டில் உள்ள சில்லறைக் கடைஉரிமையாளர்களுக்கு மஞ்சள் பைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
விழாவில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்பிக்கள்கௌதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), சின்ராஜ் (நாமக்கல்), எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள்,சதாசிவம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, சேலம் மாநகரகாவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, எஸ்பி அபிநவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோடை விழாவையொட்டி 5 லட்சம் மலர்களைக் கொண்டு, மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், மேட்டூர் அணை,வள்ளுவர் கோட்டம், காய்கறிகள் நிரம்பிய மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சி, குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்ஷான், மகளிருக்கு இலவச பேருந்து சலுகையை விளக்கும் வகையில் நகரப் பேருந்து என பல்வேறு வடிவங்களில் மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பூங்கா அரங்கில் பல வகையான, பல வண்ண மலர்ச்செடிகள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புகைப்படப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.