ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக டெல்லியில் உள்ள மைதானங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் தியாகராஜ் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 9 மணி வரை டெல்லியில் மைதானங்கள் திறந்திருக்கும் சூழலில், இந்த மைதானத்தில் மாலை 7 மணிக்கே அங்குள்ள விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
டெல்லி வருவாய்த் துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார், தனது நாய்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக இந்த செயலில் மைதானத்தின் காவலாளிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே, இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று பகிர்ந்துள்ளார். அதற்கு கீழே, இந்த விவகாரம் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் இனி இரவு 10 மணிவரை வீரர்களின் பயிற்சிக்காக திறந்து வைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM