சமீபத்தில் காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் விலகினார். அவர் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் விலகிய பிறகு முதன் முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்த நேர்காணலில் “தான் காங்கிரஸில் கட்சியிருந்து விலகிய கஷ்டமான விஷயம்தான். ஆனால், சில நேராமவது நாம் எல்லோரும் அவரவர்களது விஷயம் குறித்தும் யோசிக்க வேண்டும் அல்லவா?” எனக் கூறியுள்ளார்.
மேலும் கட்சியிருந்து விலகிய ஆசுவாசமாக இருக்கிறது. இனி நாடாளுமன்றத்தில் ஒரு சுதந்திரமான குரலாக ஒலிப்பேன். இனி எந்தக் கட்சியின் வாலாகவும் இருக்கமாட்டேன். இவ்வளவு காலம் ஒரு கட்சியின் பகுதியாக அதன் கொள்கையுடன் பயணித்துவிட்டு இப்போது மாறிச் சிந்திப்பது ஒரு கஷ்டமான விஷயம்தான். 2024-ல் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எல்லாக் கட்சியும் சேர்த்து ஒரு அணியாகத் திரட்ட முதன் ஆளாக நிற்பேன் என அந்த நேர்காணலில் கூறியுள்ளார். காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக ஒரு அணி சாத்தியமா, என்ற கேள்விக்கு, “எல்லாக் கட்சியும் என்றுதானே சொல்லியிருக்கிறேன். காங்கிரஸூம் ஒரு கட்சிதானே” எனப் பதிலளித்தார்.
திடீர் எனச் சமாஜ்வாடி ஆதரவில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “அது உடனடியாக எடுத்தத் தீர்மானம் அல்ல. கட்சியிலிருந்து நான் விலகிய விவரம் இப்போதுதான் வெளியே வந்தது. அதனால் வந்த அதிர்ச்சிதான் இது” மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடத்தான் தனக்கு விருப்பம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் எனத் தெளிவுபடுத்தினார். கபில் சிபல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஜி 23 தலைவர்களில் முதன்மையானவர். காந்தி குடும்பத் தலைமைக்கு எதிராக வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்தவர்.