வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது.
பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் எலெக்ட்ரானிக் சிட்டி உள்ளது. இந்த நகரத்தின் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இதன் காரணமாக இந்த நகரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
நியோ மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து இந்த அதி நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் இதுபோன்ற பேருந்து நிறுத்தங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன பேருந்து நிறுத்தத்தின் உள் பகுதியில் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் எந்திரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, எடை பார்க்கும் எந்திரம், சார்ஜிங் பாயின்ட், டிஜிட்டல் தகவல் பலகை ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பேருந்து நிறுத்தத்தின் இரண்டு புறங்களிலும் அவரச கால எஸ்ஓஎஸ் பட்டன்கள், குடிநீர் வசதி ஆகியவை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியின் ஒரு புறத்தில் சைக்கிள் நிறுத்தம், மறுபுறம் குப்பைத் தொட்டிக்கள் இடம்பெற்றுள்ளன. சைக்கிள் நிறுத்தம் இடத்தில் செங்குத்து தோட்டம் அமையும்.
பேருந்து நிறுத்தத்தின் மேல்புறத்தில் சிசிடிசி கேமரா, பொது அறிவிப்பு வசதி, வானிலை மற்றும் காற்றின் தரம் குறித்த அறிக்கை, சூரிய ஒளி மின் தகடுகள், ஏர் ப்யுரிபயர் ஆகியவை இடம்பெறும். 2 கட்டமாக மொத்தம் 15 பேருந்து நிலையங்களை அமைக்க எலக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் திட்டமிட்டள்ளது. நவீன, பாதுகாப்பான, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்களாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.