புதுடெல்லி: கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் நேற்று 3 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாரணாசி விரைவு நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளது. இம்மனுக்கள் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி சுவரில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க உத்தரவிட கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதில், வழக்கை வாராணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை நேற்று 3-வது நாளாக மாவட்ட சிவில் நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ் விசாரித்தார். அப்போது இந்துக்கள் தரப்பில் மேலும் மூன்று முக்கிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆதி விஷ்வேஸ்வரர் கோயில்
இந்த மனுக்களை விஸ்வ வேதிக் சனாதன் சங் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் கிரண் சிங் அளித்துள்ளார். முதல் மனுவில் கியான்வாபி மசூதியானது ஆதி விஷ்வேஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகவும் அங்கு சிவலிங்கம் கிடைத்ததன் மூலம் இது உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றொரு மனுவில், அம்மசூதியினுள் கிடைத்துள்ள சிவலிங்கத்தை பூஜை செய்ய இந்துக்களை அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மூன்றாவது மனுவில், அந்த மசூதியின் பகுதியானது கோயிலாகிவிட்டதால் அதனுள், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ், மூன்று மனுக்களையும் வாரணாசியின் சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான மகேந்திர குமார் பாண்டேவின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இம்மனுக்கள் மே 30-ல் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
அதேவேளையில் மசூதி நிர்வாகத்தினரின் முதன்மை வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.