இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் சென்றார். அப்போது நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பரம்பரைக் கட்சிகளால் நாட்டின் இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘பரிவாரவாதி’ கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றன.
ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் கவனம் இருக்கிறது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்னை மட்டுமல்ல, அது ஜனநாயகத்துக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் மிகப்பெரிய எதிரி.
ஒரு குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகம் எப்படி ஊழலின் முகமாக மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. அதனால் மக்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குடும்ப அடிப்படையிலான கட்சிகள் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதில் மும்முரமாக உள்ளன, அதே நேரத்தில் பா.ஜ.க தெலங்கானாவைத் தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது.
மூடநம்பிக்கை கொண்டவர்களால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க முடியாது. எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தை வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கையாளர்களிடம் இருந்து தெலங்கானாவைக் காப்பாற்ற வேண்டும்” எனப் பேசினார்.