சென்னை: குரங்கு அம்மை பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை திருவள்ளூவர் தெருவில் புதிய மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 10 இடங்களில் மழைநீர் வடிகால் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், “கடந்த ஆட்சியில் மாநகரை அழகுப்படுத்துகிறோம் என அலங்கோலப்படுத்திவிட்டனர். நடைபாதைகளை அகலப்படுத்துவதாக கூறு மழைநீர் வடிகால்களை மூடியதால் தான் கடந்த பருவமழையின் போது தியாகராயர் நகர் , மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தான் தற்போது மழைநீர்வடிகால்கள் சீரமைப்பு, புதிய வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் நிலையை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் முதியோர் சிகிச்சை மருத்துவமனையில் கட்டிடத்தின் தரம் குறித்து உறுதிப்படுத்த ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்கின்றனர். ஆய்வுஅறிக்கை அடிப்படையில் கான்ட்ராக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. வருகிற 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்தாமல் உள்ளனர்.
குரங்கு அம்மை பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்த வந்த ஒருவருக்கு முகத்தில் கொப்பலம் போன்று இருந்தது. சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனவே தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.