பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் ஆண்டு சம்பளம் ரூ.49.7 கோடியில் இருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.71 கோடியாக உயர்ந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது.
காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜிநாமா செய்தனர். அதிலும் குறிப்பாக நடுத்தரப் பிரிவு அலுவலர்கள் பெரிய அளவில் வெளியேறினர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த நிலை எதிரொலித்தது.
வளம் கொழிக்கும் ஐடி துறை
இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த போக்கு அதிகமாக காணப்படுகிறது.
தனியார் ஆய்வு நிறுவனமான இந்தியா இன்க் வெளியிட்ட அறிக்கையில் ஐடி துறையின் அபார வளர்ச்சி மற்றும் தற்போதைய சூழல் காரணமாக இந்த ஆண்டு உலகம் முழுவதுமே ஐடி துறை ஊழியர்கள் பெரிய அளவில் சம்பள உயர்வு பெறுவார்கள் என தெரிவித்தது.
கரோனா காலத்தில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக அனைத்து வேலைகளையும் செய்தனர். இதனால் ஐடி துறையின் தேவை அதிகரித்தது. எதிர்பார்த்த விதமாக பெரும் வளர்ச்சியையும் ஐடி துறை அடைந்தது. இத்தகைய நேரங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவியதால் வேலைவாய்ப்பு அதிகரித்து.
அதேசமயம் பலர் வேலையை விட்டு சென்றதால் தேவை மேலும் அதிகரித்தது. இதனால் ஏராளமானோரை ஐடி நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்து வருவதுடன் இருக்கும் ஊழியர்களுக்கும் அதிகமான சம்பளம் வழங்கி வருகின்றன.
ஆண்டுக்கு ரூ.71 கோடி
ஐடி ஊழியர்களுக்கு சம்பள விகிதம் குறைந்த பட்சம் 15% அதிகரித்திருக்கலாம் என்றும் இது மற்ற எந்த துறையை விடவும் மிக அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஓராண்டு முடித்த புதியவர்களுக்கு சம்பளம் 60% வரை கூட உயரும் என தகவல் வெளியானது. பட்டப்படிப்பு முடித்து புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு கூட 3.65 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இருந்து, 4.25 லட்சம் ரூபாயாக சம்பளம் அதிமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2021-22 நிதியாண்டில் அவரது சம்பளம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. சலில் பரேக் 2020-21ஆம் நிதியாண்டில் 49.7 கோடி ரூபாய் மட்டுமே பெற்ற நிலையில் அவரது சம்பளம் 2021-22 நிதியாண்டில் 71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் நிலையான சம்பளம் என்பது ரூ.5.69 கோடியாகும். ரூ.12.62 கோடி வேரியபிள் பே எனப்படும் கூடுதல் தொகையாகும். 38 லட்சம் ரூபாய் பிற பலன்களாகும். இதனை தவிர இன்போசிஸ் பங்குகளை விருப்பத் தேர்வாக திருப்பியளிப்பதன் மூலம் பெறும் தொகை ரூ.52.33 கோடியாகும். இதன் மூலம் இவருடைய மொத்த ஆண்டு சம்பளம் 71 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
யார் இந்த சலில் பரேக்?
2021-22ஆம் ஆண்டுக்கான சம்பளம் 43 சதவீதம் அதிகரித்து மூலம் மொத்தம் 71 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமாகப் பெறுகிறார். சலில் பரேக்கிற்கு வழங்கப்பட்ட 43% சம்பள உயர்வு இன்போசிஸ் மட்டுமின்றி மற்ற ஐடி துறை ஊழியர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சலில் பரேக் மும்பையில் உள்ள பாம்பே ஐஐடியின் மாணவர் ஆவார். பாம்பே ஐஐடியில் ஏரோனாட்டிக்கல் இஞ்னியரிங் படித்துள்ளார். 2018-ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிர்வாகியாக சலில் பரேக் பொறுப்பேற்றார்.
இவரது பதவிக் காலத்தில் இந்தியாவின் பிற ஐடி நிறுவனங்களை விடவும் இன்போசிஸ் அதிக லாபம் பெற்றது. அதற்காக இவரது பதவிக் காலம் 2027-ம் ஆண்டு வரை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்து இன்போசிஸ் நிர்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.