சீனர்களுக்கு விசா தர லஞ்சம் பெற்றதாக புகார்: கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறைஅமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம்பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது.

பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவருக்கும் லஞ்சம்கொடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். விசாநடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நான் உதவவில்லை என்றும் சிபிஐ தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீதும் பாஸ்கர் ராமன் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும்அதன் ஒரு பகுதியாக குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து சென்றார். நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்தியா திரும்பும் அவர் இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.