சென்னை: பிரதமர் மோடி ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கம் வந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காரின் கதவைத் திறந்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். இதன்பிறகு, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் விமான படைத் தளம் வந்தார். அவரை அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து சாலை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தார். மோடி வரும் சாலையில் முழுவதும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைப் பார்த்த பிரதமர் மோடி காரின் கதவை திறந்து பொதுமக்களை நோக்கை கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். கரகாட்டம் உள்ளிட்ட பராம்பரிய கலைநிகழ்ச்சிகளை காரில் இருந்து பார்த்து ரசித்தபடி பிரதமர் மோடி நேரு விளையாட்டு அரங்கம் சென்றார்.
திட்டங்கள் விவரம்:
சென்னை – பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி – சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அத்துடன், ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மதுரை – தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை, சென்னை தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, எண்ணூர் – செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் – பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், டிஐஜிக்கள், 29 துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.