சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் சின்ஹா தற்போது தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜியாக உள்ளார். தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஜூனியர் விகடன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் கண்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டிலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கண்ணனுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாததால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா இதற்கு முன்பாகவே சென்னை காவல்துறையில் இணை ஆணையராகவும், கூடுதல் ஆணையராக பணியாற்றி உள்ளார். மேலும் பிரேம் ஆனந்த் சின்ஹா இதற்கு முன்பாக பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல்துறை எஸ்பியாகவும், மத்தியபோதைப் பொருள் சென்னை மண்டல இயக்குனராகவும், சென்னை காவல்துறையில் போக்குவரத்து இணை ஆணையராகவும், சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராகவும், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் மதுரை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றிய சட்டம் ஒழுங்கு பணியில் நல்ல அனுபவம் பெற்றவர். 2001-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா நாளை அல்லது நாளைமறுநாள் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – முன்விரோதம் காரணமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM