ஒடிசாவில் செல்போன் திருடிய நபரை லாரியின் முன்பக்கமாக கட்டிவைத்த ஓட்டுநர், வாகனத்தை அதிவேகமாக இயக்கியுள்ளார்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கஜேந்திரா ஸ்வைன். பகுதிநேரமாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் தன் அலைபேசி காணவில்லை என்று கத்தியதால் அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திராவை பிடித்துள்ளனர்.
அவரது இரு கைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்து, அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்து உள்ளனர். அதன்பின் லாரியை வேகமாக 15-20 நிமிடங்கள் இயக்கியுள்ளனர். திருடிய இளைஞரை அச்சுறுத்தும் வகையிலான இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இளைஞர் புகார் அளிக்கவில்லை என்று கூறிய ஜகத்சிங்பூர் எஸ்பி அகிலேஷ்வர் சிங் இளைஞர் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தவுடன் லாரி டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற ஒடிசா மனித உரிமைகள் ஆணையம், ஜகத்சிங்பூர் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்கி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM