சேலத்தில் களை கட்டிய மாம்பழம் விற்பனை- விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சேலம்:

இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.

குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி, செந்தூரா சேலம்- பெங்களூரா, சேலம் குண்டு, நடுசாலை, குதாதத் உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விளைகிறது.

இந்த மாம்பழங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருவம் தவறிய மழையால் நடப்பாண்டு விளைச்சல் சற்று குறைவாக தான் உள்ளது.

ஆனாலும் கடந்த வாரங்களை விட தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்கள், கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் உச்சம் அடைந்துள்ளதால் விலையும் சற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

மேலும் ஏற்காடு கோடை விழா தொடங்கி உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் விற்பனை மேலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலை புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதைத் தவிர நாமக்கல், மாவட்டம், சேந்தமங்கலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் பறிக்கப்படும் மாங்காய்கள் சேலம் மார்க்கெட்டுக்கும், தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, குதாதத், கிளிமூக்கு மாங்காய் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் கடந்த 15-ந் தேதிக்கு மேல் சீசன் உச்சக்கட்டமாக இருப்பதால் மாங்காய் வரத்து 80 முதல் 90 டன்னாக உயர்ந்துள்ளது.

தற்போது சீசன் களை கட்டியுள்ளதால் சேலத்தில் இருந்து வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் பார்சல் அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ. 50 முதல் ரூ. 130 வரை விற்கப்படுகிறது.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.