ஜம்மு-காஷ்மீரில் தொலைக்காட்சியில் நடித்துவரும் நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம், “மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் மே 25-ம் தேதியன்று அம்ரீன் பட் என்ற பெண், அவர் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பெண் தொலைக்காட்சிகளில் நடித்து வந்திருக்கிறார். தாக்குதலில் அந்தப் பெண்ணுடன் இருந்த 10 வயது சிறுவன் ஒருவரும் காயமடைந்தார். அவர்கள் இருவரும் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு மருத்துவர்கள் தொலைகாட்சி நடிகை அம்ரீன் பட் இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். அவருடன் இருந்த சிறுவன் கையில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார்.
இது குறித்து ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “புத்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. அம்ரீன் பட் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த சிறுவன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.