டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர்.
அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.
இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப்என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பள்ளி வளாகத்துக்கு நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் பயந்து போன மாணவர்கள் அலறியடித்தபடி வெளியே தப்பியோடினர். இளைஞர் சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் இறந்தார். துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். குண்டு காயம்அடைந்த மாணவர்கள் பலரைபோலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் அங்கு கதறி அழுதவண்ணம் இருந்தனர். விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். அவர் ஏன் பள்ளிக்குள் நுழைந்து சிறுவர்களை சுட்டார் என்பதும் தெரியவில்லை.
ஜோ பைடன் அதிர்ச்சி
இந்த சம்பவம் குறித்து அறிந்தஅமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். இறந்தசிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக அவர்குறிப்பிட்டார். குவாட் மாநாட்டுக்காக ஜப்பான் சென்றிருந்த அவர் நேற்று அமெரிக்கா திரும்பினார். அப்போது அதிபர் ஜோபைடன் கூறும்போது, ‘கடவுளின் பெயரால் நாம் எப்போது துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நிற்கப்போகிறோம்? இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும்” என்றார்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளவெள்ளை மாளிகை மற்றும் மற்ற அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் தகவல்
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து உயிரிழந்த இளைஞர் ராமோஸ் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்கூட்டியே தகவல் பகிர்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கிகளுடன் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து முன்பின் தெரியாத ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் டேக் செய்துள்ள ராமோஸ், ஒருரகசியம் இருப்பதாக அவருக்குகுறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5.43 மணிக்கு, தான் ஒரு செயலை செய்யப்போவதாக மீண்டும் அப்பெண்ணுக்குஅவர் செய்தியும் அனுப்பியுள்ளார்.
– பிடிஐ