தஞ்சை சிவில் சப்ளைஸ் அதிகாரி திடீர் தற்கொலை முயற்சி: அலுவலகத்தில் விபரீதம்

தஞ்சை அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் பணிபுரியும் தர ஆய்வாளர் இன்று மாலை அவரது அலுவலகத்திலேயே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (52). இவர் தஞ்சாவூரை அடுத்துள்ள முன்னையம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் தர ஆய்வாளராக கடந்த 4 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் வீரையன் இன்று மாலை 4.30 மணியளவில் அவரது அலுவலக அறையில் திடீரென பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு உடனடியாக ஸ்டொமக் வாஷ் செய்யப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த ஏப்ரல் மாதம் கடலூர் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக மாற்று ஆள் இன்னும் போடாததால் அவர் பணியிலிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை என்கின்றனர் போலீஸார்.

இதற்கிடையே, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சேமிப்புக் கிடங்கில் பிடித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை அவர் முன்னுரிமை கொடுத்து நவீன அரிசி ஆலைக்கு அரவைக்கு அனுப்பாததால் சுமார் 3 டன் எடையுள்ள நெல் சேதமைந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கான தொகை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என அவரது உயரதிகாரி சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.

வீரையனுக்கு நான்கு மகள்கள். அவர்களில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது. ஏனைய மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என உயரதிகாரி சொன்னதால் தனது மூன்று மகள்களின் திருமணச் செலவுக்கு என்ன செய்வது என்ற கவலையால் மனமுடைந்த வீரையன் பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்கின்றனர் போலீஸார். இச்சம்பவம் குறித்து வல்லம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.இர்ஷாத் அஹமது
தஞ்சாவூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.