சென்னை: தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்கத் திட்டத்தில் இளம் வல்லுநராகப் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு:
30 இளைஞர்கள் தேர்வு
திறன் மிகுந்த இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாக்கத் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு 2022 முதல் 2 ஆண்டு காலத்துக்கு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த 30 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் உதவித்தொகையும், ரூ.10 ஆயிரம் கூடுதல் படியும் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் முதல் வகுப்பு இளநிலை பட்டம் அல்லது கலை அறிவியல் படிப்பில் முதல் வகுப்புடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 22 முதல் 30 வரை எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. தமிழ்வழி பயன்பாட்டுத்திறன் கட்டாயம். முதல்கட்டத் தேர்வு (கணினிவழி), அதைத்தொடர்ந்து விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவர். களப்பணிக்காக அவ்வப்போது மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த சிறப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் இளம் வல்லுநர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை கல்வியில் முதுகலை சான்றிதழ் வழங்கப்படும். அதோடு, தகுதியானவர்களுக்கு பிஎச்.டி பட்டப் படிப்பு மேற்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
கடைசி நாள் ஜூன் 10
இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் இளை ஞர்கள் www.tn.gov.in/tncmfp, www.bim.edu/tncmfp என்ற இணையதள முகவரிகளில் ஜுன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.