திருப்பத்தூர் மாவட்டத்தில் மர்ம விலங்கு கடித்ததில் ஒன்பது ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கே.பத்தரபள்ளி பகுதியை சேர்ந்த அலமேலு என்பவர் கணவரை இழந்த நிலையில் தனியாக ஆடு மேய்த்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் நேற்று ஆடுகள் அனைத்தையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பிறகு மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கொட்டகைகளில் சுமார் 9 ஆடுகளையும் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வந்து பார்த்த போது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 9 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்துள்ளன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அலமேலு மற்றும் அப்பகுதி மக்கள் மர்ம விலங்கை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் 9 ஆடுகளை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த அலமேலு, தனக்கு மாவட்ட நிர்வாகம் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.