அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்தாரி, தான் தாக்குதல் நடத்தும் முன், ஜேர்மனியிலுள்ள தன் ’காதலிக்கு’ குறுஞ்செய்திகள் அனுப்பியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Salvador Ramos (18) என்னும் அந்த தாக்குதல்தாரி, ஒன்லைனில் தான் சந்தித்த 15 வயது பெண் ஒருத்திக்கு, தான் செய்யப்போவதைக் குறித்து முகநூலில் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறான்.
தன் பாட்டியைத் தான் கொல்லப்போவதாகவும், பிறகு தன் பாட்டியைத் தான் கொன்றுவிட்டதாகவும், அதற்குப் பின் தான் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாகவும் அவன் அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளான்.
இந்த மாதத் துவக்கத்தில்தான் Salvador அந்தப் பெண்ணை இணையத்தில் சந்தித்துள்ளான். அவன் அவளைக் காதலி என்று அழைத்தாலும், தான் அவனை இம்மாதம் 9ஆம் திகதிதான் முதன்முதலாக ஒன்லைனில் சந்தித்ததாகவும், சமூக ஊடகம் வாயிலாகத்தான் அவனைத் தனக்குத் தெரியும் என்றும் ஜேர்மனியிலுள்ள பிராங்க்பர்ட்டைச் சேர்ந்த அந்தப் பெண் கூறியுள்ளாள்.
தான் அவளைக் காதலிப்பதாவும், ஐரோப்பாவுக்கு வந்து அவளை சந்திக்க இருப்பதாகவும் அவளிடம் உறுதியளித்துவிட்டுத்தான் பிள்ளைகளைக் கொல்லச் சென்றிருக்கிறான் Salvador.
ஆனால், பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின்போதே பொலிசார் ஒருவர் அவனை சுட்டுக்கொன்றுவிட, காதலிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமலே போய்விட்டான் அவன்!