புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (1992) (எம்சிஓசிஏ) 23(2)வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில ஏடிஜிபி மற்றும் புனே மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியாது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடுமையான எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது, அரசியல் சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அந்த நபர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 438-வது பிரிவின் கீழ் நீதிமன்றங்களை நாடி முன்ஜாமீன் பெறலாம். ஆனால், ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத நபர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதப்படுகிறார்கள். இதுபோன்று சட்டத்தையும் சட்ட நடைமுறைகளையும் மதிக்காதவர்கள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவின் கீழ் நிவாரணம் கோர முடியாது” என்றனர்.