நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார்.
பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று (25) கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தபோதே அதன் தலைவர் இந்தப் பரிந்துரையை வழங்கினார்.
இந்த நெருக்கடி நிலை ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்ன என வினவப்பட்டபோது பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2020 மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கடன் உதவியைப் பெறச் சென்றபோது, இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் இல்லை என்பது அவர்களினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். எனவே கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதாயின் கடன் மறுசீரமைப்புக்குச் செல்லவேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநருக்கு நாணய சபை எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய நிதிச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலந்துரையாடல்களின் பின்னர் மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஊடாக நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு குறித்த தொழில்நுட்ப பரிந்துரையை அனுப்பியிருந்ததாகவும், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சரவையின் ஊடாகவே அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அப்போதிருந்த நிதி அமைச்சர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்தைத் தெரிவித்திருக்கவில்லை என்றும், பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால் இதன் உண்மையான நிலையைத் தெரிவித்திருக்கவில்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வா இங்கு தெரிவித்தார். அத்துடன், 2019 நவம்பர் சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் காணப்பட்டதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சில மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறானது அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வரி வருமானம் குறைக்கப்படக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் அப்போதிருந்த ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டின் ஊடாக 600 பில்லியன் ரூபா வரியைக் குறைப்பதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
புதிய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர இங்கு சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் நாணய மாற்று விகிதத்தை மிதக்கவிடாது தக்கவைத்துக் கொண்டமையால் பாரிய தொகை இழக்கப்பட்டிருப்பதாக சமூகத்தில் நிலவும் கருத்துத் தொடர்பிலும் குழு வினவியது. இது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நாணயச் சபைக்கே இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பைப் பயன்படுத்தி நாணய மாற்று விகிதத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை தானும், நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த சஞ்ஜீவ ஜயவர்த்தனவும் கடுமையாக எதிர்த்ததாக நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார். இருந்தபோதும் நாணயச்சபையின் உறுப்பினர்கள் மூவருடைய தீர்மானத்துக்கு அமைய நாணயமாற்று விகிதத்தை ஒரே தொகையில் தக்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட நாணயச் சபை உறுப்பினராக சமந்த குமாரசிங்க ஆகியோரின் விருப்பத்துக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதாகவும் இங்கு புலப்பட்டது. வெளி தரப்பினரின் செல்வாக்கு இன்றி துல்லியமான தொழிநுட்ப காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியது.
அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் சொய்துகொள்ளும்வரையான பணயத்தில் எதிர்வரும் 3-4 மாதகாலத்துக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வது சிக்கலானதாக இருந்தாலும் இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களைக் குறைந்தளவு பயன்படுத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாகத் தயாரிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவிடம் பரிந்துரைத்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் கோப் குழுவின் தலைவர் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஜகத் புஷ்ப குமார, கலாநிதி சரத் வீரசேகர, மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.