“நியாயத்தை உணர்வீர் என நம்புகிறேன்” – பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 5 கோரிக்கைகள்

சென்னை: அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் சார்பில் 5 கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், இந்த கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் சில முக்கியமான கோரிக்கைகளைத் தமிழக மக்களின் சார்பில் முன் வைக்க விரும்புகிறேன்.

> தமிழகத்தின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமருக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

> 15-5-2022 அன்று வரை தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

> பல்வேறு மாநிலங்களின் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றும் நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வற்புறுத்திக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

> பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

> இறுதியாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறையைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை, விரைந்து வழங்கிட பிரதமரை இந்தத்தருணத்தில் தமிழக மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.