பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக இளைஞர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது நண்பர் பாலா என்ற இளைஞரும் உதவி செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் அந்த சிறுமியிடம் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து அருண்குமார் மற்றும் பாலா ஆகிய இரண்டு இளைஞர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.