இஸ்லாமாபாத்,-”பாக்., அரசு, அடுத்த ஆறு நாட்களுக்குள் அனைத்து மாகாண சட்டசபைகளையும் கலைத்து தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்,” என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் எதிர்கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ‘என் ஆட்சி கவிழ பாக்., ராணுவமும், அமெரிக்காவும் தான் காரணம்’ என கூறி வரும் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், புதிய அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தும்படி கோரி வருகிறார்.
இதற்காக தன் கட்சியினருடன் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். நேற்று இம்ரான்கான் கட்சியினர் பேரணி, பக்துன்கவா மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் வந்தது. அப்போது இம்ரான் கான் பேசியதாவது:எங்கள் பேரணியை அடக்குமுறையால் ஒடுக்க இறக்குமதி அரசு நினைக்கிறது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு வீச்சில் ஒருவர் பாலத்தில் இருந்து விழுந்து இறந்துஉள்ளார்.
அடக்குமுறையால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது. நான், இஸ்லாமாபாத்தில் மறியல் போராட்டம் நடத்தினால், மக்களுடன் போலீசும், ராணுவமும் மோதும் என மகிழ்ச்சிக் கணக்கு போடுகிறது அரசு. அடுத்த ஆறு நாட்களுக்குள் அனைத்து மாகாண சட்டசபைகளையும் கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்த அரசு உத்தரவிட வேண்டும். மறுத்தால், தேசத்தின் ஒட்டுமொத்த மக்களுடன் தலைநகருக்கு திரும்பி வந்து போராடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement