1988-ல் நடந்த சாலை தகராறு வழக்கு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்து குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சிறை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சித்துவுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, நீண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை எப்படிச் சுருக்குவது, சிறைப் பதிவுகளைத் தொகுப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கப்படும். சிறை கையேட்டின்படி சித்துவுக்கு முதல் 90 நாள்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. பயிற்சி முடிந்ததும், ஒரு நாளைக்கு ரூ.40 முதல் ரூ.90 வரை ஊதியம் பெற தகுதியுடையவர் ஆவார். அவருடைய திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்க முடிவு செய்யப்படும். பிறகு அவரது வங்கிக் கணக்கில் வருமானம் வரவு வைக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் சிறை அதிகாரி ஒருவர், “நவ்ஜோத் சிங் சித்து ஒரு உயர்மட்ட கைதி ஆவார். அவர் செவ்வாய்கிழமை எழுத்தராக பணிபுரியத் தொடங்கினார். இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றுவார். சித்துவை கண்காணிக்க ஐந்து வார்டன்கள், நான்கு சிறைக் கைதிகள் கேட்கப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு உடல் உபாதைகள் இருப்பதால் அதற்கு தகுந்தபடி இவருக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்” எனக் கூறினார்.