சென்னை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள்:
> சென்னையில் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இன்று (மே 26) மாலை 4.50 மணிக்கு வந்தார்.
> பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு ஆகியோர் வரவேற்றனர்.
> எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.வாசன் ஆகியோர் பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.
> சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாலை 5.10 மணிக்கு அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்குச் சென்றார்.
> அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வரவேற்றார்.
> அப்போது பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
> அடையாறிலிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு மாலை 5.15 மணிக்கு புறப்பட்டார்.
> பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் பாரம்பரிய கலைகள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
> நேரு விளையாட்டரங்கம் செல்லும் வழியில் சிவானந்தா சாலையின் தொடக்கத்தில் காரின் கதவை திறந்து கையசைத்து பொதுமக்களின் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
> பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து சரியாக மாலை 6.13 மணிக்கு விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி வந்தார்.
> விழா மேடையில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
> தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
> மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். அனைவரையும் வரவேற்ற அவர், முதல்வர் ஸ்டாலின் பெயரை உச்சரித்து வரவேற்கும்போது கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது. அரங்கத்தில் இருந்தவர்கள் சத்தமாக கோஷம் எழுப்ப, எல்.முருகன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்த வேண்டிவந்தது.
> சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
> சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
> சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்
> மதுரை – தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதையை நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்.
> ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
> முதல்வரின் கையை பிடித்து அருகில் நிற்க வைத்து பயனாளிகளுக்கு பிரதமர் வீடுகளை வழங்கினார் பிரதமர் மோடி.
> முதல்வர் பேசும்போது அரங்கத்திலிருந்த பாஜகவினர் ’பாரத் மாதா கி ஜே’ கோஷம் என எழுப்பினர்.
> இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த திமுகவினர் கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர்.
> முதல்வர் பேசும்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசியதோடு, தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகை, நீட் தேர்வு விலக்கு, தமிழை அலுவல் மொழியாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
> வணக்கம் என்று தமிழில் கூறி தனது பேச்சை பிரதமர் மோடி தொடங்கினார்.
> செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் பாடலை நினைவுகூர்ந்தார்.
> பிரதமர் உள்கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவம், இந்தியாவில் மத்திய அரசு அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.
> பிரதமர் தனது உரையை நிறைவு செய்யும் போது பாரத் மாதா கி ஜெ.. வந்தே மாதம் முழக்கங்களுடன் நிறைவு செய்தார்.
> விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டரங்கில் இருந்து பிரதமர் மோடி 7.33 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
> விமான நிலையம் செல்லும் வழிதோறும் பாஜக தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.