பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன்
அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் மாலைநேர மல்லிப்பூ. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம் பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் பாலியல் தொழிலாளியாகவும், குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.
வினித்ரா மேனன் கூறியதாவது: படக்குழு அறிமுகமானபோது இவர்களை நம்பலாமா..? என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. நான் எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை படமாக்கும் போது பல தருணங்களில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினேன். என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றார்.