தனி விமானம் மூலம் ஐதராபாத்தில் நகரில் இருந்து பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கு வந்தடைந்தார். தற்போது பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசி வருகிறார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். கட்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம். ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்; எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எய்திட, அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு என்பதனையே முதலமைச்சர் முக ஸ்டாலின் அழுத்தமாக கூறினார். அப்போது கூடி இருந்த திமுக தொண்டர்கள் ஒவ்வொருமுறையும் கோஷமிட்டனர்.