மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையச் செயலராக இருந்த இ.சரத்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில்,
“ஜனநாயக ரீதியாக கட்டமைக்கப்பட்ட, ஓர் அரசியல் அமைப்பான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், தலைவர் கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன்.
தலைவரின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 21,139 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தேன். அதன் பின்னர் எனக்கு மாநிலச் செயலர் பொறுப்பு வழங்கினார்.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது.
அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாகக் குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டுபோய் சேர்க்கமுடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்” என்று சரத்பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று, சரத்பாபு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை, கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அங்கு கமலஹாசன் ஒன்றியத்தின் தப்பாலே என்று பாட்டு பாடி கொண்டிருக்க, இங்கு அவர் கட்சி தலைமை நிர்வாகி ஒன்றியத்தில் ஒன்றிணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது யார் தப்பாலே?