மக்களைத் தேடி மருத்துவத்தில் 7லட்சம் பேர் பயன் – 12ந்தேதி தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றும், வரும் 12ம் தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும்,  தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவல்  இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழ்நாடு முழுவதும் மீண்டும் செயல்படுத்தப்பட்டு உள்ள  மக்களை தேடி மருத்துவம் மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த திட்டம் மூலம் குறுகிய காலத்தில் சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்றார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. ஆகவே, குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை என்றார்.

தமிழ்நாட்டில், வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று கூறியவர், இதுவரை தமிழ்நாட்டில் 93.73 சதவீதம் பேர்  முதல்கட்ட தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 2ம் கட்ட தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர். இன்னும்  1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.