மதுரை: மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதில் நேற்று முதல் ரயில் வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்புடன் தனது பயணத்தைத் தொடங்கியது. இதனை காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்.
மதுரை – போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி கடந்த 2010 டிசம்பரில் தொடங்கியது. முதல்கட்டமாக மதுரை – தேனி வரையிலான அகலப்பாதை பணிகள் நிறைவுற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து, மதுரை – தேனி வரை பயணிகள் ரயிலை இயக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, 2 சரக்கு பெட்டிகள், 10 பொதுப்பெட்டிகள் அடங்கிய பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மதுரை- தேனிக்கு மீண்டும் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) மாலை காணொலி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.
இதையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் 6-வது நடைமேடையில் மதுரை – தேனி ரயிலின் தொடக்க விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, திமுக எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே பொறியாளர்கள் , அதிகாரிகள், பாஜக மாநில பொதுச் செயலர் ஆர். ஸ்ரீனிவாசன், புறநகர் மாவட்ட செயலர் சுசீந்திரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை நடைபெற்ற விழாவில் இருந்து பிரதமர் மோடி மதுரை- தேனி ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், மதுரை ரயில்நிலையத்தில் 6-வது நடைமேடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலை 6.45 மணிக்கு முன்னாள் அமைச்சர், செல்லூர் கே. ராஜூ, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
12 ஆண்டுக்கு பிறகு மதுரையிலிருந்து தேனிக்கு புறப்பட்டுச் சென்ற இந்த ரயிலில் பாஜக மாநில பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் சசிராமன் உள்ளிட்ட பாஜகவினர், ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் பயணித்தனர். 8 பெட்டிகளுடன் சென்ற இந்த ரயில் தேனிக்கு சுமார் 8.30 மணிக்கு சென்றடைந்தது. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி உட்பட வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்து ரயிலை உற்சாகமாக வரவேற்றனர்.
தேனி ரயில் நிலையத்தில் ரயிலை ரவீந்திரநாத் எம்.பி, எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்எல்ஏ லாசர், ஆட்சியர் கா.வீ. முரளீதரன், எஸ்பி உமேஷ் டோங்கரோ உள்ளிட்டோர் வரவேற்றனர். நாளை (மே-27) முறைபடி, மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்த கால அட்டவணையின்படி, காலை 8.30 புறப்பட்டுச் செல்லும் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. தொடக்க விழாவையொட்டி, முதன்முறையாக தேனிக்கு செல்லும் இந்த ரயிலை காண மதுரை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பலர் வந்து இருந்தனர்.
பயணிகள் கருத்து
மதுரை துரைராஜ்: “நான் சாதாரண லோடு மேன். பல ஆண்டுக்கு பிறகு மதுரை – தேனிக்கு ரயில் சேவை தொடங்கியது மகிழ்ச்சி. இலவசமாக போகலாம் என்பதால் தேனிக்கு செல்கிறேன். இந்த ரயில் மூலம் இரு மாவட்ட மக்கள் பயனடைவார்கள். தேனியில் இருந்து ஆடு, கோழி உள்ளிட்ட பொருட்களை எளிமையாக மதுரைக்கு கொண்டு வரலாம். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
மகமு, பிரேமா, ஜனனி: “குறிப்பாக அரசு, தனியார் துறையில் ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இந்த ரயில் ரொம்ப உதவியாக இருக்கும். பேருந்துகளை விட ரயிலில் பாதுகாப்பு அதிகம். ஒரே நேரத்தில் பேருந்துகளில் 50 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ரயில் 1,000 பேர் வரை பயணிக்கலாம். தேனி, வைகை அணை போன்ற சுற்றுலா தலங்களை பார்க்க உதவியாக இருக்கும். கட்டணமும் குறைவு. இந்த வழித்தடத்தில் கிராஸிங் இல்லை. தினமும் பகலில் இரண்டு முறைக்கு பதிலாக 4 முறை இயக்கலாம். வாரத்தில் ஞாயிறு மட்டும் ஓடாது என்கிறார்கள். அன்றைக்கும் இயக்க வேண்டும். விடுமுறையில் சுற்றுலா பயணிகள், மக்களுக்கு வசதியாக இருக்கும்” என்றனர்.