சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தேசியக் கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் தாய்மொழியில் படிக்க முடியும்.பிரதமர் ஆவாஷ் யோஜனா திட்டத்தின்படி வீடுகள் பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, விழாவில் கலந்துகொண்டவர்களை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்று அவர் பேசுகையில்,
“தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான தமிழகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கிறார்.
தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்கிறேன். சாமனிய மக்களின் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றல்மிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் வரவேற்கிறேன்” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் என்ற பெயரை சொன்னதும் அரங்களில் இருந்த திமுக தொண்டர்கள் கத்தி கூச்சலிட்டு தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அமைச்சர் எல் முருகன் பேசமுடியாமல் திகைத்து நின்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஒன்றிய அரசு என்பதனையே அழுத்தமாக கூறினார். அப்போது கூடி இருந்த திமுக தொண்டர்கள் ஒவ்வொருமுறையும் கோஷமிட்டனர்.