புதுச்சேரி: “மத்திய அரசு கூடுதல் நிதி தரும், பிரதமரைச் சந்திக்க விரைவில் டெல்லி செல்வேன். மின்துறை தனியார்மய விவகாரத்தில் மக்களுக்கு நல்லதையே அரசு செய்யும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கையுள்ளது. பட்ஜெட் தாக்கலாகும்போது எந்தெந்த திட்டங்கள் என்பது தெரியும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுவைக்கு வந்தபோது, புதுவைக்கான வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் போன்ற நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளோம், அதனை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமரை சந்திக்க, கூடிய விரைவில் டெல்லிக்குச் செல்வேன்.
புதுவை மின்துறை தனியார்மய விவகாரத்தில், புதுவை மக்களுக்கு எது நல்லது, நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அதையே புதுவை அரசு மேற்கொள்ளும். மின்துறை ஊழியர்கள் தரப்பில், துணை நிலை ஆளுநரை சந்தித்துள்ளதால், அதன் நிலைப்பாடு என்ன என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
மின்துறை தனியார்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா, பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.