பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய உடன் சென்னைக்கு இன்று வருகிறார். இந்த பயணத்தில் 31,000 கோடி மதிப்பிலான பெங்களூரு-சென்னை இடையே நெடுஞ்சாலைத் திட்டம் உட்பட 11 திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தனது பயணத்தின் போது அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கட்சியினர் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால் இன்று சென்னையில் பல இடத்தில் போக்குவரத்து பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் திடீர் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு என்ன காரணம்..?!
மு.க.ஸ்டாலின் – மோடி
சென்னை பயணத்தில் முதல் பணியாகப் பிரதமர் மோடி 2,960 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் பயன்பாட்டுக்காகத் துவக்கி வைக்கிறார்.
மதுரை-தேனி
75 கி.மீ நீளமுள்ள மதுரை-தேனி இடையிலான மேம்படுத்தப்பட்ட ரயில் பாதை (ரயில் பாதை மாற்றும் திட்டம்), ரூ. 500 கோடி செலவில் கட்டப்பட்டது. இத்திட்டம் பகுதியில் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும்.
தாம்பரம்-செங்கல்பட்டு
புறநகர் சேவைகளை மேம்படுத்த தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 590 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 30 கி.மீ நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை பெரிய அளவில் உதவும்.
இயற்கை எரிவாயு குழாய்
115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவு ETBPNMT (எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி) இயற்கை எரிவாயு குழாய், ரூ.8950 கோடி செலவில் கட்டப்பட்டது.
இத்திட்டம் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நுகர்வோர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.
லைட் ஹவுஸ் திட்டம்
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற திட்டத்தின் கீழ் ரூ. 116 கோடி செலவில் சென்னையில் கட்டப்பட்ட 1,152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. சென்னையில் கட்டப்பட்ட வீடுகளின் பெயர் லைட் ஹவுஸ் திட்டம்.
பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை
இதை தொடர்ந்து 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 திட்டங்களுக்கும் இன்று மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் திட்டம் 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை ரூ.14,870 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு
இந்த 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை திட்டம் மூலம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் காரணத்தால் பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை 2-3 மணிநேரம் குறைக்க உதவும்.
மதுரவாயல் 4 வழி இரட்டை அடுக்கு Flyover
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் (NH-4) வரை 21 கிமீ தொலைவுக்கு 4 வழி இரட்டை அடுக்கு Flyover-ஐ ரூ.5,850 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. சென்னை துறைமுகத்திற்குச் சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் எவ்விதமான தாமதமும் இல்லாமலும், வேகமாக செல்வதை இத்திட்டம் உறுதி செய்யும்.
புதிய சாலைகள்
NH-844 இன் 94 கிமீ நீளமுள்ள 4 வழி நெரலூர் முதல் தருமபுரி வரையிலும், 31 கிமீ நீளமுள்ள 2 வழிப்பாதையும் என்எச்-227 இன் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான பகுதி வரை முறையே சுமார் ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.
5 ரயில் நிலையங்கள்
தமிழகத்தில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். இத்திட்டம் சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட உள்ளது.
மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்
மேலும் சென்னையில் சுமார் 1430 கோடி ரூபாய் மதிப்பிலான மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இது தடையற்ற இடைநிலை சரக்கு இயக்கத்தை வழங்கும் மற்றும் பல செயல்பாடுகளை வழங்கும்.
PM Modi to inaugurate 11 new projects in tamilnadu today – Check full details
PM Modi to inaugurate 11 new projects in Tamilnadu today – Check full details மோடி-யின் சென்னை பயணத்தில் துவங்கப்படும் 11 திட்டம் என்னென்ன.. முழு விபரம்..!