தீவிரவாத வழக்குகளில் சிக்கிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 குற்றங்களில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் மீது தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தது, காஷ்மீரில் 2017-ம் ஆண்டில் தீவிரவாதத்தை பரப்பியது, தீவிரவாத செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரவீன் சிங், யாசின் மாலிக் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி அறிவித்ததார். அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக என்ஐஏ தரப்பில் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை தீர்ப்பளித்த சிறப்பு நீதிபதி பிரவீன் சிங், யாசின் மாலிக்குக்கு 2 வழக்குகளில் ஆயுள் தண்டனை விதித்தார். ஆயுள் தண்டனையை வாழ்நாள் இறுதிவரை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், 10 குற்றங்களில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனைகளையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் லால் சவுக் பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க, பாதுகாப்பு படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.