ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளை பிரதமர் மோடி இன்று மாலை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான சீராமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான், மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சென்னை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் வி.தவமணி பாண்டி, கட்டுமான பிரிவு இணை முதன்மை பொறியாளர் ரதி, மதுரை கோட்ட பொறியாளர் ஹிருதயேஷ் குமார், சென்னை கோட்ட வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க தற்போது உள்ள ரயில் நிலையம் ரூ. 120 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. புதிய ரயில் நிலையக் கட்டடம் இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளன. எதிர்காலத்தில் ஆறு மாடிகள் கட்டும் அளவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது மாடிக்கு மேலே திறந்தவெளி உணவகங்கள் அமைய இருக்கின்றன.
பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தூண்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பிரகார தூண்கள் போல அமைய உள்ளன. ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியிலும் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் வர இருக்கிறது.
நடைமேடைகள் 3, 4 ,5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் மற்றும் ரயில்வே சேவை அலுவலகங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளன. தங்கும் அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள் ஆகியவையும் நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைய 18 மாதம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.