![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653569260_NTLRG_20220526135052306251.jpg)
ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான விஜய்பாபு என்பவர் மீது துணை நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியும் அதன்பின்னர் பலமுறை தன்னை மிரட்டியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்த மறுநாளே பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இன்னொரு தவறையும் செய்தார் விஜய்பாபு. இந்த இரண்டு காரணங்களுக்காக அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் போலீசாரிடம் கைதாவதில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். அதன்பின்னர் தான் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் தற்போது ஜார்ஜியா நாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் விஜய்பாபு கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். திங்களன்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதலில் விஜய்பாபு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும், அதன்பிறகு தான் ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் விஜய்பாபுவின் விமான டிக்கெட்டை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவரது வழக்கறிஞர்கள், வரும் திங்கட்கிழமை அன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தனர்.