சென்னை: ரேஷன் அரிசியை சட்ட விரோதமாகக் கடத்துபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி அபாஷ்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழக காவல்துறையின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி அபாஷ்குமார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கண்காணிப்பு தீவிரம்
குறிப்பாக, தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட வேறு எந்த மாநிலத்துக்கும் தமிழக ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாநில எல்லையில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
45 பேர் மீது குண்டர் சட்டம்
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்டதாக 1,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 461 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,740 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு செல்வதையும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவதையும் தடுப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி அபாஷ்குமார் எச்சரித்துள்ளார்.