சென்னை: “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்கும்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டவர்களை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அப்போது அவர் பேசியது: “தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான தமிழகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கிறார். தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்கிறேன். சாமனிய மக்களின் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றல்மிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் வரவேற்கிறேன்.
புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்கும். தமிழகத்தில் உள்ள 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பிரதமர் வழங்கி வருகிறார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார். சொல்லுதல் யார்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணம் செயல் என்று திருக்குறளை மேற்கோள்காட்டி, சொல்லியதை சொன்னபடி செய்பவர் பிரதமர் நரேந்திர மோடி” என்று அவர் கூறினார்.
4 பேருக்கு மட்டுமே இருக்கை: பிரதமர் பங்கேற்றுள்ள விழாவில் பிரதமர், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
ஆர்ப்பரித்த கூட்டம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை கூறியபோது, அரங்கத்தில் இருந்தவர்கள் பெரும் ஒலி எழுப்பினர்.
முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர். பின்னர், அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்துக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வரவேற்றார்.
திட்டங்கள் விவரம்:
சென்னை – பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி – சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அத்துடன், ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மதுரை – தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை, சென்னை தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, எண்ணூர் – செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் – பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.