வளமான மண்ணே வளமான வாழ்க்கைக்கு ஆதாரம்- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு

“இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் சத்குரு ‘நகரங்களின் எதிர்காலம்’ (Future of Cities) என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அப்போது, உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றிற்கு மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு பேசினார்.
மேலும், வளம் இழந்த நிலங்களை மீட்டெடுக்க ‘ஒரு கட்டிட நகரம்’ (One Building City) என்ற தனது யோசனை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து பேசுகையில், “நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதை கட்டுமான துறையினர் பரீசிலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 50 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் மட்டும் 50 முதல் 100 மாடி கட்டிடங்களை கட்டலாம். மீதமுள்ள 49 ஏக்கரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக காடு உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் அங்கு சாகுபடி செய்து கொள்ளலாம்” என கூறினார்.
சில நகரங்களில் மட்டும் அளவுக்கு அதிகமாக செய்யப்படும் பொருளாதார முதலீடுகள் குறித்து பேசுகையில், “உலகில் 72 சதவீத பொருளாதார முதலீடுகள் வெறும் 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம்பெயர செய்யும் காந்தமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமற்றதாகவும் மாறுகிறது. இதற்கு பதிலாக, முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
இம்மாநாட்டில் ஈக்வடார் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹெலனா கவுலிங்கா, இந்திய – அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சத்குரு தனது 65 வயதில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இதுவரை 72 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.