திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதுதான் இதற்கு காரணம். எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விசாரணையில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நடிகை தேவையில்லாமல் பயப்படுகிறார். எனவே, அவர் தனது மனுவை வாபஸ் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார். ஆனால், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சியாத் ரகுமான், ‘மனுவை வாபஸ் பெறும்படி நடிகையிடம் கேட்க முடியாது. இதுதொடர்பாக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.* முதல்வரை சந்தித்தார் நடிகைஅடுத்த வாரம் திருக்காக்கரை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசை குறை கூறி நடிகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஆளும் தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகையின் புகார் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன், இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜன் உள்பட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறினர். இதையடுத்து நடிகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி இறங்கியது. இந்நிலையில், நேற்று காலை நடிகை திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்துப் பேசினார். பிறகு நடிகை கூறியதாவது: நான் நீதிமன்றத்தில் புகார் கூறியதன் பின்னணியில் எந்த அரசியல் குறிக்கோளும் கிடையாது. யாருடைய வாயையும் மூட முடியாது. எனக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. நான் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்துப் பேசினேன். நீதிமன்றத்தில் நடந்த அனைத்து சம்பவங்கள் பற்றியும் சொன்னேன். எனக்கு இந்த வழக்கில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார். முதல்வர் அளித்த உறுதியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.