மே 17-ம் தேதியன்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், அவர் மகனும் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசாக்கள் வழங்க சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின்மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். பின்னர், இந்த விசா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக, டெல்லியிலிருக்கும் சி.பி.ஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று நேரில் ஆஜரானார். விசாரணை அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “நான் எந்த சீன நாட்டவருக்கும் விசா பெறுவதற்கு ஏற்பாடு செய்யவில்லை” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “இது ஒரு பொய்யான வழக்கு. பொய்யான குற்றச்சாட்டு. வேடிக்கையான கேள்விகள்… நமத்துப்போன பட்டாசு போல இந்த வழக்கு முடிந்துவிடும்” என்று கூறினார்.
இந்த நிலையில், விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவுசெய்த பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை, மே 30-ம் தேதிவரை கைதுசெய்ய டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.